மாணவர்களின் எதிர்காலம் கருதி சந்தேகநபருக்கு பிணை வழங்க முடியாது

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
மாணவர்களின் எதிர்காலம் கருதி சந்தேகநபருக்கு பிணை வழங்க முடியாது

செல்வநாயக் கபிலன்

யாழ்ப்பாணத்தில் தற்போது கஞ்சா பாவனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சமூகத்தின் தேவை கருதியும் மாணவர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில்கொண்டு, கஞ்சா வைத்திருந்த சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க முடியாது என, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு யூலை மாதம், 183 கிலோ 500 கிராம் கஞ்சாவை, பருத்தித்துறை - அம்பன் பகுதியூடாகக் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில், சந்தேகநபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

கடந்த 1 ½ வருடங்கலாக சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பிணையில் விடுவிக்குமாறு கோரி, சட்டத்தரணி மூலம், யாழ். மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தார்.

பிணை விண்ணப்பத்தினை, திங்கட்கிழமை (27) பரிசீலணை செய்தபோதே, நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாரதூரமான தாக்கத்தினை ஏற்படுத்தி, எமது மாணவர்களின் மத்தியில் போதைப்பாவனைப் பழக்கத்தை ஏற்படுத்தும் கஞ்சா, தற்போது ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றதுடன், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமூகத்தின் தேவை கருதியும் மாணவர்களின் எதிர்காலத்தினைக் கருதியும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிய விச போதைப்பொருளினை கட்டுப்படுத்த வேண்டிய தேவை நீதிமன்றங்களுக்கு உள்ளது.

கஞ்சா கடத்துவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே இவற்றை கட்டுப்படுத்த முடியும். தனிப்பட்ட நபர் ஒருவரின் நலணுக்காக பிணை வழங்க முடியாது. சமூகத்தின் பொது நலணை முக்கியமாக கருத்தில்கொண்டு, இம் மன்று, மேற்படி நபரின் பிணையினை நிராகரிப்பதாக நீதிபதி இதன்போது தெரிவித்தார்.

மூலக்கதை