எரிபொருள் விநியோக நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம்

PARIS TAMIL  PARIS TAMIL
எரிபொருள் விநியோக நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம்

கொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
 
முப்படையினரின் ஒத்துழைப்புடன் முப்படையின் சாரதிகள் ஊடாக பௌசர் மூலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம்  நேற்று முன்தின நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமையால், நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
 
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை சீனாவுக்கும் சீன துறைமுகத்தின் எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
 
இதனையடுத்து, நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் நியாயமான தீர்வு கிடைக்காமையினால், பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அறிவித்தது. 
 
இந்நிலையில், கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலுள்ள ஊழியர்கள் சகலரும் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு இராணுவம் அதனைக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
 
ஜனாதிபதி எரிபொருள் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் நேற்றிரவு கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை