டிராபிக் ராமசாமி வாழ்க்கை சினிமாவாகிறது: எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்

தினமலர்  தினமலர்
டிராபிக் ராமசாமி வாழ்க்கை சினிமாவாகிறது: எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்

பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. தன்னந்தனி ஆளாக அரசியல் கட்சிகளையும், அரசையும் எதிர்த்து போராடி திக்குமுக்காடச் செய்து வருகிறார். அவரது வாழ்க்கை தமிழில் சினிமாவாக தயாராகிறது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேரின் உதவியாளர் விஜய் விக்ரம் இயக்குகிறார். கிரீன் சிக்னல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதில் டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பொதுமக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. அப்படி தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கி தந்தவர். இத்தீர்ப்புகளினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளும், ரவுடிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் இவர் மீது கோபம் கொண்டு இவரை பல வகையில் கொடுமை படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல முறை டிராபிக் ராமசாமியை கொல்ல முயற்சிகளும் நடைபெற்றிருக்கிறது. அப்படி இருந்தும் தொடர்ந்து அவர் சமூகத்திற்காக இன்றும் போராடிக்கொண்டே தான் இருக்கிறார். அந்த போராட்ட குணம் என்னை கவர்ந்தது.

என் உதவி இயக்குனரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே என்னை வைத்து பலரும் பாராட்டிய நகைச்சுவையான மார்க் என்ற குறும்படத்தை இயக்கியவர். விரைவில் இதன் படப்பிடிப்புகள் துவங்குகிறது. என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

மூலக்கதை