இயக்குனராக அவதாரம் எடுப்பேன்! :ஜெயம் ரவி

தினமலர்  தினமலர்
இயக்குனராக அவதாரம் எடுப்பேன்! :ஜெயம் ரவி

தொடர் வெற்றிக்கு சொந்தக்காரரான ஜெயம் ரவி, அடுத்ததாக, மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ள, வனமகன் படம், இன்று வெளியாகிறது. வனமகன் குறித்தும், தன் திரையுலக அனுபவம் குறித்தும், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், அவர்.

வனமகன் படம் பற்றி?

ஒரு அழகான கதை. தமிழ் சினிமாவில் புதிய களம். அன்பு, காதல், காமெடி, ஆக் ஷன் எல்லாமே படத்தில் இருக்கு. இயக்குனர் விஜய் இந்த கதையை சிரமப்பட்டு வடிவமைத்து இருந்தார். முடிந்த வரை, என் பகுதியை சிறப்பாக செய்துள்ளேன்.

படத்தில் உங்க ரோல்?

இந்த படத்தில் ஆதிவாசியாக நடிக்கிறேன். இந்த உலகத்தில், மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே, இந்த ஆதிவாசிகள் இருக்காங்க. எந்த வித ஊசியோ, மருந்து, மாத்திரைகளோ சாப்பிடாமல், இன்னும் அவர்கள், தலைமுறை தலைமுறையாக வாழ்வது, அதிசயமான ஒரு விஷயம். ஆதிவாசிகளில் ஒருவனாக நான் நடித்திருக்கிறேன்.

இந்த படத்திற்காக உங்க மெனக்கெடல்?

இந்த கதையை கேட்கும் போதே, சாதாரணமாக வந்திட்டு போக முடியாது, இதற்கான மெனக்கெடல் அதிகமாக இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இந்த படத்திற்காக, 'ஜிம்' போய், உடல் குறைந்ததை விட, படப்பிடிப்புக்கு போய் குறைந்தது தான் அதிகம். உடல் ரீதியாக, மன ரீதியாக கஷ்டப்பட வேண்டியிருந்தது. படத்தில், எனக்கு பக்கம் பக்கமா வசனங்கள் ஏதும் இல்லை. அதனால், அதை நடிப்பு உணர்வால் வெளிப்படுத்த வேண்டியிருந்தது, சிரமமாக இருந்தது.

பிரத்யேக, 'மேக் - அப்' போடப்பட்டதாமே?

இயக்குனர் விஜய், ஆதிவாசிகள் பற்றிய, முழு விபரங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தார். அதனால், இந்த படத்திற்கு மிக அதிகமாக உழைத்தேன். இதுவரை, தமிழ் சினிமாவில் ஆதிவாசிகளை பார்த்திராத, புது கோணத்தில், என் முகத்தை முழுவதுமாக மாற்றி விட்டனர். கேரவனில் இயக்குனர் சொல்ல சொல்ல, 'மேக் - அப்' ஆட்கள் தலை முடியை சுத்தமாக வெட்டும் போது, கிட்ட தட்ட அழுதே விட்டேன். கடைசியில், அந்த முகம் எல்லாரும் பாராட்டும் படியாக அமைந்தது.

படப்பிடிப்பு தளங்கள் பற்றி?

பார்க்காத இடம் வேண்டும் என்பதால் வியட்நாம் போனோம். பின், சீனா சென்றோம். இங்கெல்லாம், இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியதில்லை. முக்கியமாக, தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்திய இடங்கள், மெய்சிலிர்க்கும் வகையில் இருக்கும்.

ஜெயம் ரவிக்குள் இருக்கும் இயக்குனர், எப்போது வெளியே வருவார்?

கூடிய சீக்கிரம் வருவார்; நிச்சயமாக இயக்குனராகும் ஆசை இருக்கு. உதவி இயக்குனராக இருந்திருக்கேன். சினிமா பற்றி கொஞ்சம் படிச்சிருக்கேன். சினிமா, குடும்பம் இதையெல்லாம் மனதில் வைத்து, இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து, இயக்குனர் ஆவேன்.

நயன் மற்றும் ஹன்சிகா எந்த ஜோடியை ரசிகர்கள் அதிகம் விரும்புறாங்க?

கஷ்டமான கேள்வி தான். தனி ஒருவன் படத்தில், நயன் நடித்த ரோல், அவங்களுக்கு அவ்ளோ பொருத்தமா இருந்தது, அமைந்தது. அதேபோல், எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களில், ஹன்சிகா ரோல் ரொம்ப பொருத்தமாக அமைந்தது.இயக்குனர்கள் வடிவமைத்த கேரக்டர்களுக்கு, அவர்கள் பொருத்தமாக அமைந்தது போல, அவர்களுடன் நான் இணைந்து, என் பங்கிற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருப்பேன். அதற்கு, அந்த படங்களை ரசித்த ரசிகர்களுக்கு தான், நன்றி சொல்ல வேண்டும்.

ரீமேக் படங்கள் பக்கம், இப்போதெல்லாம் அதிகம் போவதில்லையே?

போகக் கூடாது என்பதெல்லாம் இல்லை. இப்போது, புதிய முயற்சிகள், நல்ல நல்ல நேரடிக் கதைகளை தேர்வு செய்து, நடிக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் நல்ல, 'டீம்' அமைந்துள்ளது. இந்த, 'ரூட்டில்' கொஞ்ச நாள் பயணித்து பார்ப்போமே.

மூலக்கதை