மகளிர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா 275 ரன் குவிப்பு கேப்டன் மித்தாலி 85 ரன் விளாசல்

தினகரன்  தினகரன்

செஸ்டர்பீல்டு: இலங்கை அணியுடனான ஐசிசி மகளிர் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய கேப்டன் மித்தாலி ராஜ் 85 ரன் விளாசினார். ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 18, 20 தேதியிலும், இறுதிப் போட்டி ஜூலை 23ம் தேதியும் நடக்க உள்ளன. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செஸ்டர்பீல்டு, குயின்ஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் பூனம் ராவுத் 69 ரன் (79 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்மிருதி மந்தனா 44, கேப்டன் மித்தாலி ராஜ் 85 ரன் (89 பந்து, 11 பவுண்டரி), மோனா மேஷ்ராம் 30, வேதா 20* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்திருந்தது.

மூலக்கதை