உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கோல் மழை: பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் அசத்தல்

தினகரன்  தினகரன்

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் கனடாவை 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்த நிலையில், 3வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய அதே சமயத்தில், ஹாக்கி உலக லீக் தொடரிலும் இந்த அணிகள் மோதியது கிரிக்கெட்  மற்றும் ஹாக்கி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில், தொடக்க முதலே துடிப்பாக விளையாடி பாகிஸ்தான் கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். முதல் கால்மணி நேர ஆட்டத்தில் ஹர்மான்பிரீத் சிங் (13வது நிமிடம்) அபாரமாக கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை கொடுத்தார். தாக்குதலை தீவிரப்படுத்தி இந்திய அணிக்கு தல்விந்தர் சிங் 21வது மற்றும் 24வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடிக்க 3-0 என முன்னிலை அதிகரித்தது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஹர்மான்பிரீத் (33வது நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் (47’), பர்தீப் மோர் (49’) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்த 6-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு முகமது உமர் 57வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க, இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது. பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் முன்னிலை வகிக்கும் இந்தியா, தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

மூலக்கதை