அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவின் கடைசி ‘அசைன்மென்ட்’ சாம்பியன்ஸ் டிராபி?: கேப்டன் கோஹ்லியுடன் மோதலால் சிக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவின் கடைசி ‘அசைன்மென்ட்’ சாம்பியன்ஸ் டிராபி?: கேப்டன் கோஹ்லியுடன் மோதலால் சிக்கல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். அவரது ஓராண்டு  பதவிக்காலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் நிறைவு பெறுகிறது.

எனினும் அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக 5 டெஸ்ட்  தொடர்களை வென்றதால், 2019 உலக கோப்பை வரை  கும்ப்ளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர்  திருப்பமாக பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.

இந்திய  அணியின் கேப்டன் கோஹ்லி-கும்ப்ளே இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. விளையாடும் லெவனை தேர்வு  செய்யும் விவகாரத்தில் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐ நிர்வாகிகளும், பிசிசிஐ அமைப்பை  நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டியினரும் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.  

 இதனிடையே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கும்ப்ளேவுக்கு பணி நீட்டிப்பு  வழங்கப்படாது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரே, இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவின் கடைசி  ‘அசைன்மென்ட்டாக’ இருக்கலாம். பிசிசிஐயின் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி,  விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்டோர், விண்ணப்பங்களை ஆராய்ந்து, இம்மாத இறுதியில் புதிய பயிற்சியாளரின் பெயரை அறிவிப்பார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கோஹ்லி-கும்ப்ளே இடையேயான மோதல் சமீபத்தில் ஏற்பட்டது இல்லை. கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ராஜ்கோட்டில் தொடங்கியபோதே மோதல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

 கோஹ்லி மட்டுமல்ல மேலும் சில வீரர்களும் கூட கும்ப்ளே அணியை இயக்கும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

கேப்டனுக்கு விருப்பம்  இல்லை எனும்போது வெளியில் உள்ள யாராலும் எதுவும் செய்ய முடியாது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே கும்ப்ளே பயிற்சியாளராக நீடிக்க  முடியும்’ என்றார்.

எனினும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டியில் இடம் பெற்றுள்ள ஒரு உறுப்பினர் கும்ப்ளேவுக்கு ஆதரவாக உள்ளார். பெயர் வெளியிட  விரும்பாத அவர் கூறுகையில், ‘ஒரு குழந்தையை போல் கோஹ்லி நடந்து கொள்கிறார்.

கும்ப்ளே நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ளார். எனவே கமிட்டி  நியாயமாக நடந்து கொள்ளும்’ என்றார்.

 ‘கண்டிப்பானவர்தான் ஆனால் உதவக்கூடியவர்’
இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘கும்ப்ளேவுக்கு யாருடனும் மோதல் போக்கு  இல்லை.

கும்ப்ளேவுடனான உறவு குறித்து தற்போது விளையாடி வரும் வீரர்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவருடன் இணைந்து நான் விளையாடிய  15 ஆண்டுகளில் எந்த மோதலும் ஏற்பட்டது கிடையாது.

அவர் எப்போதும் பிறருக்கு உதவும் மனப்பான்மை உடையவர். ஆனால் கொஞ்சம் கண்டிப்பாக  நடந்து கொள்பவர்’ என்றார்.

 சம்பள உயர்வு கோரிக்கை காரணமா?
இந்திய அணியின் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் கும்ப்ளே கோரிக்கை  விடுத்திருந்தார்.

இந்த சூழ்நிலையில்தான் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ நிர்வாகி  ஒருவர் கூறுகையில், ‘கும்ப்ளே அணியை இயக்கும் விதம் சரியில்லை என வீரர்கள் எழுப்பிய போர்க்குரல் காரணமாகத்தான் இப்பிரச்னை  எழுந்துள்ளது.

சம்பள உயர்வு கோரிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றார்.



.

மூலக்கதை