சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டி இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை: ரோகித் சர்மா உறுதி: யுவராஜ் சிங் சந்தேகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டி இந்தியாவங்கதேசம் இன்று பலப்பரீட்சை: ரோகித் சர்மா உறுதி: யுவராஜ் சிங் சந்தேகம்

லண்டன்: லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி  போட்டியில், இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது.   காய்ச்சல் காரணமாக யுவராஜ் சிங்கும், சகோதரரின் திருமணம் காரணமாக ரோகித் சர்மாவும் அந்த போட்டியில் விளையாடவில்லை.

ரோகித் சர்மா   தற்போது இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக மிடில்-ஆர்டரில் களமிறங்கி வந்த ரோகித் சர்மா, இன்றைய போட்டியில் ஷிகார் தவானுடன் இணைந்து  தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2013ம் ஆண்டில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியதில் ஷிகார்  தவான்-ரோகித் சர்மா கூட்டணிக்கு முக்கிய பங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

 ரோகித் சர்மா இந்திய அணிக்காக கடைசியாக விளையாடியது கடந்த  ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான். அதன்பின் காயத்தால் அவதிப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு வந்து, இந்திய அணிக்காக மீண்டும்  விளையாடவுள்ளார்.

ஆனால் யுவராஜ் சிங் விளையாடுவது இன்னமும் சந்தேகத்தில்தான் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி  போட்டியில் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

மறுபக்கம் வங்கதேச அணி தனது முதல் பயிற்சி போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. அதில் இருந்து மீண்டு  வர வங்கதேசம் முயற்சிக்கும்.

இன்று மதியம் 3 மணிக்கு பர்மிங்ஹாமில் நடைபெறும் மற்றொரு பயிற்சி போட்டியில் நியூசிலாந்து-இலங்கை அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. அனைத்து அணிகளுக்கும் இதுவே கடைசி பயிற்சி போட்டியாகும்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு தங்களை முழுமையாக  தயார்படுத்தி கொள்ள இந்த போட்டிகளை அனைத்து அணிகளும் பயன்படுத்தி கொள்ள முயலும்.

.

மூலக்கதை