தொடரும் இயற்கையின் சீற்றம் - கொழும்பும் நீரில் மூழ்குமா?

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரும் இயற்கையின் சீற்றம்  கொழும்பும் நீரில் மூழ்குமா?

 சிறிலங்காவில் நிலவும் இயற்கையின் சீற்றம் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 

 
ஐந்து இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா இடர்காப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
 
மத்திய மலை நாட்டிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீர்நிலைகள் நிறைந்து வழியத் தொடங்கியுள்ளன. 
 
மலைநாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதகவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. தாழ்நிலங்களை நோக்கி வெள்ளம் விரைந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
தொடர்ந்தும் அடைமழை பெய்யும் பட்சத்தில் களனி கங்கை பெருங்கெடுத்து கொழும்பு நகருக்குள் நீர் பரவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
களனி, கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டி, பியகம, சேதவத்த தொம்பே, பன்வெல, பாதுக்கை, அவிசாவளை பகுதிகளில் பேராபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய அவல நிலை உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி எச்சரித்துள்ளார்.
 
இது குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறன நிலை தொடருமாயின் கொழும்பு நகரை நோக்கியும் வெள்ளம் வரும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என யாழ். மாவட்ட வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
காங்கேசன்துறை, திருகோணமாலை, மட்டக்களப்பு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 
 
கடற்பகுதிக்கு அப்பால் சுமார் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை இருக்கலாம். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலக்கதை