மினி உலக கோப்பையை வெல்லப்போவது யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
மினி உலக கோப்பையை வெல்லப்போவது யார்?

ஏறத்தாழ ஒன்றரை மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களை தொற்றியிருந்த ஐபிஎல் ஜுரம் நிறைவடைந்து விட்டது. அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களை டிவி முன் கட்டிப்போட வருகிறது மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி.

ஒரு நாள் போட்டிகளில், உலக கோப்பைக்கு பிறகு, அதிக முக்கியத்துவம் பெறும் தொடர் இதுவே. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி), 1998 முதல் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படுகிறது.

‘ஐசிசி நாக் அவுட் டோர்னமென்ட்’ என்பதே அதன் பெயர். 2002ல்தான் சாம்பியன்ஸ் டிராபி என பெயர் மாற்றப்பட்டது.

1998-2006 வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மினி உலக கோப்பை திருவிழா அரங்கேறியது.

இந்த வரிசையில் 2008 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பாதுகாப்பில் நிலவிய அச்சுறுத்தலால் பாகிஸ்தான் மண்ணில் விளையாட மாட்டோம் என பல அணிகள் ஓரணியாக திரண்டு போர்க்கொடி உயர்த்தின. இதனால் குழப்பமடைந்த ஐசிசி, 2008ல் நடந்திருக்க வேண்டிய தொடரை 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடத்தியது.

இதன்பின் உலக கோப்பையை போல், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாம்பியன்ஸ் டிராபி-யை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதனால் 2009க்கு பிறகு 2013ல்தான் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்த திட்டமிடப்பட்டு வந்ததால், அதுவே கடைசி சாம்பியன்ஸ் டிராபி எனவும் அறிவிக்கப்பட்டது.

பின்னாளில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் திட்டம் கைவிடப்பட்டதால், 2017 சாம்பியன்ஸ் டிராபி ஜுன் 1-18 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் என ஐசிசி உறுதி செய்தது.

சாம்பியன்ஸ் டிராபி-யில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்டே வந்துள்ளது. இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம், கென்யா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய 13 அணிகள் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சாம்பியன்ஸ் டிராபி-க்கு தகுதி பெற்றுள்ளன.



‘கட்-ஆப்’ தேதியை அடிப்படையாக வைத்து, ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் முறைதான் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி கடந்த 2015 செப்டம்பர் 30ம் தேதியன்று தரவரிசையில் டாப்-8 இடங்களில் இருந்த ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் நடப்பு தொடரில் பங்கேற்கின்றன.

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் கோலேச்சிய வெஸ்ட் இண்டீஸ், சாம்பியன்ஸ் டிராபி-க்கு தகுதி பெறாமல் போவது வரலாற்றில் இதுவே முதல் முறை. கத்துக்குட்டி அடையாளத்தை துறந்துள்ள வங்கதேசம் 2006க்கு பிறகு முதல் முறையாக மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் நுழைந்துள்ளது.

சாதனைகள்

* சாம்பியன்ஸ் டிராபி-யில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் நியூசிலாந்தின் கைலே மில்ஸ்.

15 இன்னிங்சுகளில் 28 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* 2006ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இலங்கையின் பர்வேஸ் மகரூப் 14 ரன் மட்டும் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சு.


* அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல். 17 இன்னிங்சுகளில் 791 ரன் குவித்துள்ளார்.


* 2004ல் அமெரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்தின் நாதன் ஆஸ்ட்லே விளாசிய 145 நாட் அவுட்தான் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்.
* 2004ல் அமெரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன் குவித்ததே அதிக ஸ்கோர்.


* 2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமெரிக்கா 65 ரன்னுக்கு சுருண்டதே குறைந்த ஸ்கோர்.

பயிற்சி போட்டி

சாம்பியன்ஸ் டிராபி-க்கான பயிற்சி போட்டிகள் 26ம் தேதி (நாளை) தொடங்குகிறது.

முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தியா 2 பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.

இதன்படி வரும் 28ம் தேதி நியூசிலாந்தையும், 30ம் தேதி வங்கதேசத்தையும் இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெறுகின்றன.

‘லீக்’ சுற்று ஜுன் 1ம் தேதி தொடங்குகிறது.

‘இந்திய படை’

2017 சாம்பியன்ஸ் டிராபி-க்கான 15 பேர் கொண்ட இந்திய படை: விராட் கோஹ்லி (கேப்டன்), அஸ்வின், பும்ரா, ஷிகார் தவான், டோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், புவனேஸ்வர் குமார், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரஹானே, உமேஷ் யாதவ், யுவராஜ் சிங், முகமது ஷமி.

இதுவரை சாம்பியன்கள்

ஆண்டு    சாம்பியன்     

1998    தென் ஆப்ரிக்கா    
2000    நியூசிலாந்து    
2002    இந்தியா-இலங்கை     
2004    வெஸ்ட் இண்டீஸ்    
2006    ஆஸ்திரேலியா    
2009    ஆஸ்திரேலியா    
2013    இந்தியா

(கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த 2002 பைனலில் இலங்கை நிர்ணயித்த 245 ரன் இலக்கை துரத்திய இந்தியா 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மறுநாள் ஆட்டம் மீண்டும் புதிதாக தொடங்கப்பட்டது.

அப்போது இலங்கை நிர்ணயித்த 223 ரன் இலக்கை துரத்திய இந்தியா 8. 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்தியா-இலங்கை இணை சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன).  

.

மூலக்கதை