சிறிலங்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்!

 அமெரிக்காவின் அடுத்தாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், 2.88 மில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு ஒதுங்குமாறு கோரப்பட்டுள்ளது.

 
சிறிலங்கா அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கும், எல்லை கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளது.
 
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசாங்கம், அமெரிக்காவுக்கு முதலிடம் என்ற கொள்கைளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் கீழ் வெளிநாடுகளுக்கான உதவிகள், திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், 37.6 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்யுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் யுஎஸ் எய்ட் என்பன கோரியுள்ளன.
 
ஒபாமா அரசாங்கத்தின் காலத்தில் 2017ஆம் ஆண்டுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் யுஎஸ் எய்ட் என்பன 440.7 பில்லியன் டொலரைக் கோரியிருந்தன. இது 2018 ஆண்டுக்காக கோரப்பட்டுள்ள தொகையை விட 11 மடங்கு அதிகமாகும்.
 
2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் எல்லை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறிலங்காவுக்காக 380,000 டொலர்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும், பிராந்திய கடல்சார் தலைமைத்துவத்தைப் பெறும் வகையிலும், சிறிலங்கா கடலோரக் காவல்படையின் ஆற்றலை ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் எல்லை பாதுகாப்பு திட்டம் தொடர்ந்து கட்டியெழுப்பும் என்றும் இந்த வரவுசெலவுத்திட்டக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிறிலங்கா உள்ளிட்ட மோதல்களினால் பாதிக்கப்பட்ட நாடுகளை, மீண்டும் பின்நோக்கித் திரும்பாமல் தடுத்து மீட்டெடுப்பதற்கான வரையறுக்கப்பட்ட உதவிகளை வழங்குவதற்கான பூகோளத் திட்டங்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 18.6 மில்லியன் டொலரை கோரியுள்ளது.
 
சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள், வெடிபொருள்களை அகற்றும் செயற்பாடுகளுக்கு உதவிகள் மற்றும் ஆதரவு அளிக்கப்படும்.
 
2018ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில், தெற்காசியாவுக்கான உதவித் திட்டங்களுக்காக 94.4 மில்லியன் டொலர் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் உள்ள சிறிலங்கா அகதிகள்,  நாடு திரும்பும் அகதிகள், மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், புகலிடம் கோரி திருப்பி அனுப்பப்பட்டவர்களின் மனிதாபிமான  நிலையை முன்னேற்றுவதில் இணைந்து பணியாற்றுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒபாமா நிர்வாகத்தின் போது, 2017ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு 31 மில்லியன் டொலர் நிதி உதவியை அப்போதைய இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை