சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் நாடுகளை சமாதானப்படுத்தும் ஐசிசி : ‘இங்கிலாந்து பாதுகாப்பான இடம்தான்’ என இ-மெயில்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் நாடுகளை சமாதானப்படுத்தும் ஐசிசி : ‘இங்கிலாந்து பாதுகாப்பான இடம்தான்’ என இமெயில்

மான்செஸ்டர்: இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் நேற்று முன் தினம் இரவு பாப் பாடகி அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது குண்டு வெடித்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.

இதனால் இங்கிலாந்தில் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாதுகாப்பில் அச்சம் நிலவுவதாக உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) தெரிவித்தது.

எனினும் வீரர்கள் யாரும் அச்சம் தெரிவிக்கவில்லை என்றும், இந்திய அணியின் பயண திட்டத்தில் இதுவரை எவ்வித மாறுதல்களும் செய்யப்படவில்லை என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனால் திட்டமிட்டபடி இந்திய அணி இன்று மாலை இங்கிலாந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு ஆலோசகரும், முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனருமான நீரஜ்குமார்  இங்கிலாந்து புறப்பட்டார். மான்செஸ்டர் நகரில் போட்டிகள் இல்லை என்றாலும், வீரர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.



இதற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து (இசிபி) பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
அத்துடன் தொடரில் கலந்து கொள்ள 8 நாடுகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.

‘இங்கிலாந்து பாதுகாப்பான இடம்தான்’ என 8 நாடுகளுக்கும் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி 8 அணிகளும் விளையாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறியுள்ளார்.

.

மூலக்கதை