மக்களுக்காக ரோட்டில் இறங்கி போராடிய சுரபி

தினமலர்  தினமலர்
மக்களுக்காக ரோட்டில் இறங்கி போராடிய சுரபி

இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் மலையாள நடிகை சுரபி. இவர் மக்களுக்காக ரோட்டில் இறங்கி போராடியது கேரளாவில் வைரலாகி இருக்கிறது.

நேற்று ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொச்சியிலிருந்து காரில் சென்றார் அப்போது திருச்சூர் களியக்காவிளை என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரபியின் காருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த காரில் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்கு செல்லும் அவசரத்தில் இருந்தார். அவர் வேதனையால் துடித்துக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த சுரபி காரிலிருந்து இறங்கி சோதனை சாவடி பூத்துக்கு சென்றார். அங்கு சுங்க சாவடி ஊழியர்கள் மெத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களின் அலட்சிய போக்கே நெரிசலுக்கு காரணம் என்பதை உணர்ந்த சுரபி அவர்களை வேகமாக வேலை செய்யும்படி கூறியிருக்கிறார். இது தொடர்பாக சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் சுரபிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் காரில் இருந்த பலரும் சுரபியை அடையாளம் கண்டு அவருக்கு ஆதரவாக திரண்டனர். அதன் பிறகு சுங்க சாவடி ஊழியர்கள் விரைவாக செயல்பட்டனர்.

சுரபி சுங்கச் சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த காட்சிகள் வைரலாக பரவி உள்ளது. "உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவரது கணவர் மருத்துவனைக்கு கொண்டு சென்றார், ஆனால் செல்ல முடியாமல் தவித்தது என் மனதை பாதித்தது. அதானல்தான் நான் அவர்களுடன் வாக்குவாதம் செய்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுரபி தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை