இன்று குவாலிபயர்-2 போட்டி: பைனலில் புனேவுடன் மோதப்போவது யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று குவாலிபயர்2 போட்டி: பைனலில் புனேவுடன் மோதப்போவது யார்?

பெங்களூரு: பெங்களூரு எம். சின்னச்சாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும், ஐபிஎல் டி20 தொடரின் குவாலிபயர்-2 போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.   10 வெற்றிகளுடன் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த மும்பை, குவாலிபயர்-1 போட்டியில் புனேவிடம் தோல்வி கண்டது. முதல் 11 போட்டிகளில் 9ல் வென்ற மும்பை தற்போது தடுமாறுகிறது.

கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருப்பது அதற்கு சான்று. ஆனால் 2013 ஐபிஎல் குவாலிபயர்-1ல் தோல்வியடைந்து, பின்னர் குவாலிபயர்-2ல் வென்று பைனலுக்கு முன்னேறிதான் மும்பை கோப்பையை வென்றது.



மறுபக்கம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்பே கொல்கத்தாவுக்கு இருந்தது. ஆனால் லீக் சுற்று கடைசி போட்டியில் மும்பையிடம் தோல்வியடைந்ததால், 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

எனினும் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி குவாலிபயர்-2க்கு கொல்கத்தா முன்னேறியுள்ளது.   மும்பை கேப்டன் ரோகித் சர்மா தடுமாறி வருகிறார். இன்றைய போட்டியில் பெரிய ஸ்கோர் அடித்து அவர் ‘பார்முக்கு’ திரும்புவது அவசியம்.

மறுபக்கம் 6 ஓவர்களில் 48 ரன்களை துரத்திய எலிமினேட்டர் போட்டியில், 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விட்ட நிலையில், கொல்கத்தா கேப்டன் கம்பீர் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்து, அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

ராபின் உத்தப்பா, யூசுப் பதான் உள்ளிட்ட இதர பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில், கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோரும் அதிரடியாக விளையாடுவது கொல்கத்தாவுக்கு அவசியமானது.

பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, பொல்லார்டு உள்ளிட்டோரை பேட்டிங்கில் மும்பை பெரிதும் நம்பியுள்ளது. பந்து வீச்சை பொறுத்தவரை மும்பை அணியின் மெக்கிளனகன், பும்ரா, கொல்கத்தாவின் நாதன் கோல்டர் நைல் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.



இன்றைய போட்டியில் வெல்லும் அணி, வரும் 21ம் தேதி இரவு நடைபெறும் பைனலில், புனேவுக்கு எதிராக விளையாடும். நடப்பு சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் மும்பையே வென்றுள்ளது.

அதற்கு பதிலடி ெகாடுக்க கொல்கத்தாவும், ஆதிக்கத்தை தொடர மும்பையும் முயலும். பைனலுக்கு முன்னேற இரு அணிகளும் வரிந்து கட்டுவதால், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.

* இந்தியாவில் உள்ள மைதானங்களில் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என்றால் அது பெங்களூரு எம். சின்னச்சாமி மைதானம்தான்.

ஆனால் சமீப காலமாக பந்து வீச்சுக்கு ஒத்துழைத்து வரும் இம்மைதானத்தில் இதுவரை 9 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 7ல் வென்றுள்ளது.
* இதர அணிகளுடன் ஒப்பிடுகையில் கொல்கத்தாவுக்கு எதிராகதான் ரோகித் சர்மா அதிக ரன்களை எடுத்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிராக அவர் இதுவரை 684 ரன்களை (சராசரி 48. 86) குவித்துள்ளார்.
* பவர் பிளே ஓவர்களில் (முதல் 6 ஓவர்கள்) 9. 69 என்ற சிறந்த ‘ஸ்கோரிங் ரேட்’ கொல்கத்தா வசமும், டெத் ஓவர்களில் (இறுதி கட்ட ஓவர்கள்) 10. 71 என்ற சிறந்த ‘ஸ்கோரிங் ரேட்’ மும்பை வசமும் உள்ளன.


* பவர் பிளே ஓவர்களில் 7. 67 என்ற சிறந்த ‘எகானமி ரேட்’ மும்பையிடம் உள்ளது.  
* ரோகித் சர்மா, கம்பீர் இருவரும் முதலில் பீல்டிங் செய்யும் கேப்டன்களாகவே உள்ளனர்.

நடப்பு சீசனில் இதுவரை டாஸ் வென்ற 9 போட்டிகளில் 8ல் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். கம்பீரோ டாஸ் வென்ற 9 போட்டிகளிலும் பீல்டிங்கைதான் தேர்ந்து எடுத்துள்ளார்.

 
* இரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன.

இதில், மும்பை 15, கொல்கத்தா 5 போட்டிகளில் வென்றுள்ளன.

.

மூலக்கதை