தொழிலதிபர் நாட்டுக்கு அதிபர் ஆனார் - அமெரிக்காவின் 45வது அதிபராக ஜன.20ல் டிரம்ப் பதவியேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொழிலதிபர் நாட்டுக்கு அதிபர் ஆனார்  அமெரிக்காவின் 45வது அதிபராக ஜன.20ல் டிரம்ப் பதவியேற்பு



வாஷிங்டன், - அமெரிக்க வரலாற்றில் எம்பியாகவோ, கவர்னராகவோ எந்த பதவியிலும் இல்லாமல் தொழிலதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியை பிடித்திருக்கிறார்.   அமெரிக்காவில் கடந்த 8ம் தேதி அதிபர், துணை அதிபர், எம்பிக்கள் ேதர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பு, ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறியிருந்தன.

ஆனால், அதை எல்லாம் பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பொதுவாகவே, அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை அல்லது செனட் உறுப்பினர்(எம்பி), கவர்னர் அல்லது ராணுவ தளபதி போன்ற பதவிகளில் இருந்தவர்களே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

முதல் முறையாக ஒரு தொழிலதிபர் இந்த பதவிகளில் எதிலும் இல்லாமல் நேரடியாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வெற்றி பெற்றதும் டிரம்ப் பேசுகையில், ‘‘நமது பொருளாதாரத்தை உயர்த்த நான் புதிய திட்டங்கள் வைத்திருக்கிறேன்.

அமெரிக்காவின் நலன்தான் முக்கியம். அமெரிக்காவின் நலனை விரும்பும் நாடுகளுடன் நட்புறவுடன் இருப்போம்’’ என்றார்.

டிரம்ப்புக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கு ஜனவரி 20ம் தேதி வரை பதவிக்காலம் உள்ளது.

எனவே, ஜனவரி 20ம் தேதிதான் அமெரிக்காவின் 45 வது அதிபராக டிரம்ப் பதவியேற்பார்.

வாழ்க்கை வரலாறு

 நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரடெரிக் டிரம்ப்மேரி  மெக்லியோட் தம்பதிக்கு 4வது மகனாக கடந்த 1946ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி  பிறந்தவர் டொனால்ட் ஜான் டிரம்ப் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

படித்து முடித்தவுடன் தந்தையின் ரியல் எஸ்டேட் துறையிலேயே டிரம்ப் நுழைந்தார். புரூக்ளின் மற்றும் குயின்சில் வீடு கட்டி விற்பனை  செய்யும் பணிகளை செய்து வந்த தனது குடும்ப நிறுவனத்தை மன்ஹட்டனுக்கு  மாற்றியதுடன், அங்கு உயர்ரக அடுக்குமாடிகளை கட்டும் நிறுவனமாக  உயர்த்தினார்.

வெகுவேகமாக கம்பெனியை வளர்த்தார்.

ஐ. நா.

தலைமையகத்துக்கு மறுபுறம் இருக்கும் 72 மாடி குடியிருப்பை 2001ம்  ஆண்டு கட்டி முடித்தார் டிரம்ப். இதைப்போல ஹட்சன் ஏரியை ஒட்டியுள்ள டிரம்ப்  பிளேஸ், கொலம்பஸ் சர்க்கிளில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல் மற்றும்  டவர் உள்ளிட்ட பல்வேறு அடுக்குமாடிகளை கட்டியுள்ளார்.

டிரம்ப்புக்கு பல்வேறு வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கில்  சொத்துகளும், அடுக்குமாடிகளும் உள்ளன. மும்பையிலும் கூட அவருக்கு சொத்து உள்ளதாம்.



ரியல் எஸ்டேட் மட்டுமின்றி பொழுதுபோக்கு துறையிலும் ஆர்வமாக இருந்தவர். 1996 முதல் 2015ம் ஆண்டு வரை பிரபஞ்ச அழகி, அமெரிக்க  அழகி உள்ளிட்ட அழகிப் போட்டிகளை நடத்தும் குழுவையும் நடத்தி வந்தார்.

2003ம் ஆண்டு ‘தி அப்பிரண்டிஸ்’ என்ற மிகப்பெரும் தொலைக்காட்சி ரியாலிட்டி  ஷோவை டிரம்ப் தொடங்கினார். 70 வயதான டிரம்ப் மூன்று திருமணம் செய்துள்ளார்.

அவருக்கு  டொனால்டு டிரம்ப் ஜூனியர், இவன்கா, எரிக், டிபானி, பாரன் ஆகிய பிள்ளைகள்  உள்ளனர்.

எந்தவித அரசியல் பின்புலத்தையும் கொண்டிராத டிரம்ப், அமெரிக்க அரசியலை  அடிக்கடி விமர்சித்து வந்தார். குறிப்பாக முந்தைய அதிபர்களான ஜார்ஜ்  புஷ், ஒபாமா ஆகியோரின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

கடந்த 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு  செய்திருந்த டிரம்ப் சீர்திருத்த கட்சியின் வேட்பாளர் தேர்தலில் நின்று பின்பு வாபஸ் பெற்றார். அதன்பின், பல முறை தேர்தலில் போட்டியிட ஆசை ெதரிவித்தாலும், கடைசியாக கடந்த ஆண்டு ஜூன்  16ம் தேதி தேர்தலில் போட்டியிடப் போவதாக டிரம்ப் அறிவித்தார்.

குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்தலில் தொடங்கி, அதிபர் தேர்தல்  பிரசாரம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினார்.   மேலும் அவருக்கு எதிராக பல பெண்கள் அளித்த செக்ஸ் புகார்களும் சர்ச்சைகளை கிளறி விட்டன. ஆனாலும் அவரது, ‘அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே, அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவேன்’ போன்ற கோஷங்கள் அமெரிக்க மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

அதனால்தான், கணிப்புகளை பொய்யாக்கி அவர் அதிபராகியுள்ளார்.



.

மூலக்கதை