பங்கு வர்த்தகத்தில் எழுச்சி மிக்க வாரம்

தினமணி  தினமணி

பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி மிக்க நிலை காணப்பட்டது.

சாதகமான பருவநிலை மற்றும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய முடிவு செய்திருப்பது உள்ளிட்டவற்றால் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இதற்கு ஏற்றாற்போல, மோட்டார் வாகனங்களின் விற்பனையும் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் சூடுபிடித்துள்ளது என்ற செய்தியும் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அதிகரித்தன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த கட்டணத்தில் செல்லிடப்பேசி சேவைகளை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி தொலைத் தொடர்பு நிறுவனப் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததையடுத்து பார்தி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.16,000 கோடிக்கும் அதிகமாக வீழ்ச்சியை சந்தித்தது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற நிலைப்பாட்டுக்கிடையிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தனர்.

இதனால், கடந்த வார வர்த்தகத்தில் சென்செக்ஸ் 28,000 புள்ளிகளைத் தாண்டியும், நிஃப்டி 8,800 புள்ளிகளைக் கடந்தும் முதலீட்டாளர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தது.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மோட்டார் வாகன விற்பனை விறுவிறுப்படைந்துள்ளதையடுத்து, அத்துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 5.06 சதவீதம் அதிகரித்தது.

வங்கித் துறை பங்குகளின் விலை 3.63 சதவீதமும், பொறியியல் பொருள்கள் துறை பங்குகளின் விலை 2.91 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள்கள் துறைப் பங்குகள் விலை 1.75 சதவீதமும் உயர்ந்தன.

அதேசமயம், முதலீட்டாளர்களிடம் வரவேற்பு குறைந்ததையடுத்து, ரியல் எஸ்டேட், தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை சரிவைக் கண்டன.

டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை அதிகபட்ச அளவாக 9.16 சதவீதம் உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் (7.89%), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (6.56%), எல் & டி (5.22%), எச்.டி.எப்.சி. (5.20%), பஜாஜ் ஆட்டோ (5%), மாருதி சுஸýகி (4.83%) அதானி போர்ட்ஸ் (4.12%), கெயில் (4%) ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டன.

முதலீட்டாளர்களின் வரவேற்பை இழந்ததையடுத்து பார்தி ஏர்டெல் பங்கின் விலை (7.07%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (1.44%), விப்ரோ (1.35%) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 749 புள்ளிகள் (2.70%) அதிகரித்து 28,532 புள்ளிகளாக நிலைத்தது.

மும்பை சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.17,607.67 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 237 புள்ளிகள் (2.77%) உயர்ந்து 8,809 புள்ளிகளாக நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,14,195.24 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

மூலக்கதை