ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 32 தமிழர்களுக்கு நீதிமன்ற காவல்

BBC  BBC
ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 32 தமிழர்களுக்கு நீதிமன்ற காவல்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டவந்ததாகக் கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 32 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருப்பதி நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டாவுக்கு அருகில் உள்ள வேங்கடாபுரம் வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 பேரை ஆந்திரக் காவல்துறையும் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினரும் நேற்றுக் கைதுசெய்தனர்.

இவர்களில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும் 2 பேர் வேலூர் மாவட்டத்தையும் ஒருவர் சென்னை மாவட்டத்தையும் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களை நேற்று ஊடகங்களின் முன்பாக நிறுத்திய காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.எஸ். நஞ்சப்பா, தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் இவர்கள், ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவித்தார். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் மரம் வெட்டுவதற்கான கோடாரி முனைகளையும் காட்சிப்படுத்தினர்.

இவர்களிடமிருந்து 22 கோடாரிகளும் அரிசி மூட்டைகளும் சமைப்பதற்கான பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இவர்களை மரம் வெட்டும் பணிக்கு அழைத்து வந்த தேவராஜ் என்பவரை காவல்துறை தேடிவருகிறது.

ஆனால், தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி திருமலை கோவிலுக்குத்தான் சென்றதாக, கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இவர்கள் வேங்கடாபுரம் காட்டுப் பகுதியில் கைதுசெய்யப்படவில்லையென்றும் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் அதற்கு முந்தைய தினமே கைதுசெய்யப்பட்டார்கள் என்று கூறப்படும் தகவல்கள் காவல்துறை மறுத்துள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட 32 பேரையும் இன்று திருப்பதி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கைது நடவடிக்கையை ம.தி.மு.க, சி.பிஐ. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டித்துள்ளன.

ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டச் சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் அம்மாநில காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர், ஆந்திர காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்கள் செம்மரங்களை வெட்டச்சென்றவர்கள் என்றும் கைதுசெய்ய முயன்றபோது தாக்குதலில் ஈடுபட்டதால் சுடப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இந்திய அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

மூலக்கதை