தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.32 கோடி பறிமுதல்

மாலை மலர்  மாலை மலர்
தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.32 கோடி பறிமுதல்

புதுடெல்லி, மார்ச்.31-

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 16 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் கடந்த 4-ந்தேதி அறிவித்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து சட்டவிரோதமாக வாக்குகளை பெறுவதை கட்டுப்படுத்தவும் கருப்பு பண நடமாட்டத்தை கண்காணிக்கவும் மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் 5 மாநிலங்களிலும் பறக்கும் படையை தேர்தல் கமிஷன் அமைத்து, அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.15 கோடியே 19 லட்சம் சிக்கி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் ரூ.5 கோடியே 64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசாமில் ரூ.5 கோடியே 43 லட்சமும், கேரளாவில் ரூ.5 கோடியே 27 லட்சமும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரூ.30 லட்சமும் மொத்தம் ரூ.31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

மூலக்கதை