மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது; உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி பாராட்டு

  தினத்தந்தி
மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது; உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, மராட்டியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றதற்காக பா.ஜ.க. சார்பில் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார். டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 20 என 2 கட்டங்களாக 286 நகராட்சி கவுன்சில் மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 10 மணியளவில் நடந்தது. இதில், பா.ஜ.க.வை சேர்ந்த 129 பேர் நகராட்சி கவுன்சில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சிவசேனா, பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய 3 கட்சிகள் கொண்ட மகாயுதி கூட்டணி நகர கவுன்சில் தலைவர்களாக 75 சதவீதம் அளவுக்கு வெற்றியை பெற்றுள்ளது. இதேபோன்று பா.ஜ.க.வை சேர்ந்த 3,300 வேட்பாளர்கள் மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் இதனை தெரிவித்து உள்ளார். இந்த சூழலில், பிரதமர் மோடி இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது என்றார். மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட எங்களுடைய அரசின் மீது உள்ள நம்பிக்கை இந்த வெற்றியால் பிரதிபலிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். மராட்டியம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நோக்கங்களையும் நிறைவேற்ற புதிய சக்தியுடன் நாம் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்றுவோம் என தெரிவித்து உள்ளார். அடிமட்ட அளவில் கடுமையாக பணியாற்றிய பா.ஜ.க. மற்றும் கூட்டணியின் தொண்டர்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். Maharashtra stands firmly with development!Grateful to the people of Maharashtra for blessing the BJP and Mahayuti in the Municipal Council and Nagar Panchayat elections. This reflects trust in our vision of people-centric development. We remain committed to working with… https://t.co/X5jmfpb3M8

மூலக்கதை