சென்னையில் செல்போனுக்காக வாலிபர் கழுத்தை நெரித்து கொலை: போதைக்கும்பல் வெறிச்செயல்

  தினத்தந்தி
சென்னையில் செல்போனுக்காக வாலிபர் கழுத்தை நெரித்து கொலை: போதைக்கும்பல் வெறிச்செயல்

சென்னை புளியந்தோப்பு, வ.உ.சி.நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் அஸ்மத் பாட்ஷா (வயது 38). இவர் கடந்த 1-ந் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்ரை நோக்கி வந்த மின்சார ரெயிலில் மதுபோதையில் பயணம் செய்ததாக தெரிகிறது. அதே ரெயிலில், மெரினா கடற்கரையில் குதிரை சவாரி ஓட்டும் சுரேஷ் (38), சீனிவாசன் (52) ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அப்போது அஸ்மத் பாட்சா மதுபாட்டில்கள் வைத்திருப்பதை பார்த்ததும் சுரேஷ், சீனிவாசன் ஆகியோர் அவருடன் நட்பாக பேசியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, 3 பேரும் சென்னை கடற்கரை-பூங்கா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் திடீரென சுரேஷ், சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து அஸ்மத் பாட்சாவை சரமாரியாக தாக்கி, துண்டை வைத்து அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். தொடர்ந்து அவருடைய செல்போனையும் திருடிவிட்டு, அதனை ரெயில் நிலையத்திலேயே விற்றுவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் கொலையாளிகளை கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வந்தனர். இந்த நிலையில், கொலையாளி சுரேசை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து மற்றொரு கொலையாளியான சீனிவாசனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடிபோதையில் செல்போனுக்காக நடந்த இந்த கொடூர சம்பவம் ரெயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை