நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனம் - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

  தினத்தந்தி
நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனம்  சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய நீரிழிவு நோய் ஆய்வின்படி, 10.1 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக 2023-ம் ஆண்டு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கண்காணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதற்காக சுயபரிசோதனை குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை (எஸ்.எம்.பி.ஜி.) பயன்படுத்துகின்றனர். இதேபோல், தற்போதைய தலைமுறையினர் அதிக விலை கொண்ட குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தையும் (சி.ஜி.எம்.) பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில், குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்து இருக்கிறது. இந்த சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் தலைமையிலான மின்னணு பொருட்கள், மெல்லிய படல ஆய்வகத்தைச் சேர்ந்த சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த சாதனம், நீண்ட காலத்துக்கு பயன்படுத்துதல், துல்லியமான அளவை காண்பித்தல், நம்பத்தகுந்த தரவுகள் ஆகியவற்றை குறைந்த செலவில் உறுதி செய்திருக்கிறது. இந்த சாதனத்துக்கான காப்புரிமையையும் சென்னை ஐ.ஐ.டி. பெற்றிருக்கிறது.

மூலக்கதை