கார் கதவில் தலையை மோத வைத்து பெண் கொடூரக்கொலை.. கும்பல் வெறிச்செயல்

  தினத்தந்தி
கார் கதவில் தலையை மோத வைத்து பெண் கொடூரக்கொலை.. கும்பல் வெறிச்செயல்

காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிக்குமார். சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேசுவரி (வயது 38). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து வருகிறார். மற்றொரு மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நிலம் வாங்குவதில் மகேசுவரி அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதற்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று இடங்களை நேரில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை மகேசுவரி தனது காரில் சிலரை அழைத்துக்கொண்டு காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டுமனை வாங்குவது விஷயமாக சென்றதாக கூறப்படுகிறது. இடத்தை பார்த்துவிட்டு அவர் அழைத்து சென்ற நபர்களிடம் வீட்டுமனைக்கான விலை மற்றும் அதற்குரிய பட்டா உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். அப்போது திடீரென மகேசுவரிக்கும், அந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஆத்திரம் அடைந்த அவர்கள் மகேசுவரியின் தலையை கார் கதவில் மோத வைத்தும், கழுத்தை நெரித்தும், முகத்தை சிதைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் மகேசுவரி அணிந்திருந்த தாலிச்சங்கிலி, மற்றொரு சங்கிலி உள்ளிட்ட சுமார் 20 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு அவரது உடலை காருக்குள்ளேயே போட்டுவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் மகேசுவரியுடன் சென்றவர்கள் யார்? இடம் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மூலக்கதை