தோழியுடன் தகாத உறவு... 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் - அதிர்ச்சி சம்பவம்

  தினத்தந்தி
தோழியுடன் தகாத உறவு... 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய்  அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 38 வயது கூலித்தொழிலாளி ஒருவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த தொழிலாளியின், மனைவி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 4-ந்தேதி தொழிலாளியின் மனைவி தனது குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து தூங்க வைத்தார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கியது. உடனே பால் புகட்டியதில் மூச்சு திணறி குழந்தை மயங்கி இருக்கும் என்று கருதி அவர்களின் குடும்பத்தினர் அந்த குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தனக்கு பிறந்த ஆண் வாரிசு தவறிப்போனதில் மனம் உடைந்த தொழிலாளி சோகத்தில் மூழ்கினார். ஆனால் அதே நேரத்தில் அவரது மனைவியோ குழந்தை இறந்த சோகம் எதுவுமின்றி மறுநாளே அடிக்கடி செல்போனில் பேசி உள்ளார். இதை கவனித்த அவரது கணவர், மனைவி இல்லாத நேரத்தில் அவரது செல்போனை பார்த்தார். அந்த நேரம் மனைவி பயன்படுத்தும் செல்போனுடன், மேலும் ஒரு செல்போன் அங்கு இருந்தது. அந்த செல்போனை பார்த்த தொழிலாளி அதிர்ச்சியில் உறைந்தார். அவருடைய மனைவியும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும் உல்லாசமாக இருப்பது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள், அதில் இருந்தன. மேலும் அந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு இறந்து போன குழந்தையின் படத்தையும் மனைவி அனுப்பி இருந்ததை பார்த்து தொழிலாளி அதிர்ந்து போனார். ‘லெஸ்பியன்’ மோகத்தில் பெற்ற குழந்தையையே தனது மனைவி கொடூரமாக கொன்று இருப்பாரோ என்ற சந்தேக புயல் தொழிலாளிக்கு எழுந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தொழிலாளியின் மனைவியிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ‘லெஸ்பியன்’ மோகத்தில் பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலாளியின் மனைவிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 20 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்களின் பழக்கம் ஓரினச்சேர்க்கையாக (லெஸ்பியன்) மாறியது. ஒருகட்டத்தில் அந்த இளம்பெண், உனக்கு ஆண் குழந்தை பிறந்ததும் என்னை மறந்துவிட்டாய் என கூறியுள்ளார். தோழியின் பேச்சால் மனம் மாறிய தொழிலாளியின் மனைவிக்கு ‘லெஸ்பியன்’ ஆசை மேலோங்க ஒரு கட்டத்தில் பச்சிளம் குழந்தையை கொல்லும் கொடூர எண்ணம் எழுந்தது. இதனால் கடந்த 4-ந்தேதி மாலை தனது ஆண் குழந்தைக்கு பால் கொடுப்பதை போல கொடுத்து கையால் மூக்கை பிடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தொழிலாளியின் மனைவி மற்றும் அவரது லெஸ்பியன் தோழியையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை