ஈரோடு: நாகமலை குன்றில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

  தினத்தந்தி
ஈரோடு: நாகமலை குன்றில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள நாகமலை குன்று கடந்த மாதம் தமிழ்நாட்டின் 4-வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இங்கு நடந்த சமீபத்திய பறவைகள் ஆய்வில் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் இருந்து வெகு தூரம் பயணித்து இங்கு வரும் பறவைகளின் வருகை அதிகரித்து உள்ளது கண்டறியப்பட்டது. குறிப்பாக நெடுந்தூரம் பறக்கும் பறவைகளான சாம்பல் கழுத்து கூம்பலகன், நீலப்பூங்குருவி, மரக்கதிர் குருவி, சேற்றுப் பூனைப்பருந்து, வெண்தொண்டை காட்டுக்கதிர்குருவி ஆகியவை கடந்த வாரம் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளன. இவைகளுடன் ராஜாளி கழுகு, வல்லூறு, பஞ்சுருட்டான், சில்லை, கொண்டலாத்தி, தவிட்டுப்புறா, உழவாரன், வெண்வயிற்று கரிச்சான் உள்பட 50-க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவைகளும் இங்கு வாழ்வது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் சாம்பல் கழுத்து கூம்பலகன், நீலப்பூங்குருவி, ராஜாளி கழுகு உள்ளிட்ட பறவைகள் பாறைப்பாங்கான பகுதிகளை சார்ந்து வாழ்வது நம்மை சுற்றியுள்ள குன்றுகளின் சூழல் முக்கியத்துவத்தை குறிக்கிறது. நாகமலை குன்றில் இதுவரை 136 வகையான பறவைகள், 138 வகையான தாவரங்கள், 106 வகையான பூச்சிகள், 23 வகையான எட்டுக்காலிகள், 17 வகையான ஊர்வனவைகள், 10 வகையான பாலூட்டிகள், 8 வகையான இதர பல்லுயிர்கள் என மொத்தம் 438 உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டு இருக்கிறது.

மூலக்கதை