பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை பெண் என்ஜினீயர் அதிரடி கைது

  தினத்தந்தி
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை பெண் என்ஜினீயர் அதிரடி கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு கலாசி பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திற்கு கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி இரவு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிந்தது. இதுகுறித்து கலாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி இருந்தது. பின்னர் இந்த வழக்கும், பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பற்றி பெங்களூரு வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சென்னையை சேர்ந்த ரெனே ஜோஷில்டா (வயது 30) என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.ரெனி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர், ரெனேயை திருமணம் செய்யாமல் வேறொரு இளம்பெண்ணை திருமணம் செய்திருந்தார். இதனால் தனது காதலன் மீது ரெனே ஆத்திரமடைந்தார். வேறு பெண்ணை திருமணம் செய்த காதலனை போலீசில் சிக்க வைக்க ரெனே திட்டமிட்டுள்ளார். இதற்காக காதலனின் இ-மெயில் மூலமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அவர் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பி வைத்திருந்தார்.ஏற்கனவே குஜராத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானம், மைசூரு, சென்னையில் தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் ரெனே வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதற்காக குஜராத் போலீசார் ரெனேயை கைது செய்து அகமதாபாத் சிறையில் அடைத்து இருந்தனர்.இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் ரெனிதான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அகமதாபாத் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ரெனே வி.பி.என். இணையதளத்தை பயன்படுத்தியுள்ளார். கேட்கோட் என்ற அப்ளிகேஷன் மூலமாக வெர்ஜுவல் செல்போன் எண்களை பெற்று, 6-க்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப்பையும் பயன்படுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரெனே கைதாகி இருப்பதன் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பதிவான 6 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. காதலனை போலீசாரிடம் சிக்க வைக்க முயன்று பெண் என்ஜினீயரே போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

மூலக்கதை