சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவனுக்கு சொந்தமான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்

  தினத்தந்தி
சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவனுக்கு சொந்தமான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்

மும்பை,சட்டவிரோதமாக இயங்கி வரும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக ₹2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பணப்பரிவர்த்தனை நடந்த வழக்கு பதிவானது. இது தொடர்பாக பணமோசடி தொடர்பாக சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீதான புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, சோனு சூட், ராணா டகுபதி, நடிகை ஊர்வசி ரவுத்தேலா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்ரவர்த்தி, வங்காள நடிகர் அங்குஷ் ஹஸ்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ராபின் உத்தப்பா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தியது. இதில் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளம்பரப்படுத்துவதற்காக தெரிந்தே வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு உள்ளனர். சிலர் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணத்தில் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களின் கோடிக்கணக்கான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை திட்டமிட்டது. அதன்படி சட்டவிரோத சூதாட்ட தளத்தின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோரின் ₹11.14 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஷிகர் தவானின் ₹4½ கோடி மதிப்புள்ள அசையா சொத்தையும், ரெய்னாவின் ₹6.64 கோடி மதிப்புள்ள பரஸ்பர நிதியையும் பணமோசடி தடுப்பு சட்டத்தின்படி முடக்கம் செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

மூலக்கதை