திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த தகராறில் நடுரோட்டில் ரவுடி குத்திக் கொலை

  தினத்தந்தி
திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த தகராறில் நடுரோட்டில் ரவுடி குத்திக் கொலை

ஐதராபாத்,தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் ரோஷன் சிங் (வயது 25). பிரபல ரவுடியான இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதேபோல், ஜகத்கிரி குட்டா சோமையா நகரைச் சேர்ந்தவர் பாலசுரெட்டி (30). இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரோஷன் சிங், பாலசுரெட்டி மற்றும் அவர்களின் 6 நண்பர்கள் ஒரு திருநங்கையை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தனர். பின்னர், திருநங்கைக்கு பணம் கொடுப்பதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் பணம் கொடுக்காமல் அவரை விரட்டியடித்தனர். இதையடுத்து, திருநங்கை ஜகத்கிரி குட்டா போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஷன் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை சிறைக்கு அனுப்பியதற்கு பாலசுரெட்டிதான் காரணம் என்று அவர் எண்ணினார். மேலும், மற்றொரு பெண் தொடர்பாகவும் இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சிறையிலிருந்து வெளியே வந்த ரோஷன் சிங், தனது நண்பர்களிடம் “பாலசுரெட்டியை கொலை செய்யப் போகிறேன்” என்று தெரிவித்தார். இதை அறிந்த பாலசுரெட்டி, தானே முந்திக் கொண்டு ரோஷன் சிங்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, நேற்று மாலை 4 மணியளவில் பாலசுரெட்டி தனது நண்பர்களான அடில் மற்றும் முகமது ஆகியோருடன் மது குடித்தார். பின்னர், ரோஷன் சிங்கை தொலைபேசியில் அழைத்து பஸ் நிலையம் அருகே வரவழைத்தனர்.பஸ் நிலையம் அருகே வந்த ரோஷன் சிங் மற்றும் பாலசுரெட்டிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுரெட்டி, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரோஷன் சிங்கை சரமாரியாக குத்தினார். அவரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரோஷன் சிங்கை முகமது பிடித்துக் கொண்டார்.பாலசுரெட்டி, ரோஷன் சிங்கை ஆத்திரத்துடன் வயிற்றில் பலமுறை குத்தியதால் சாலை முழுவதும் ரத்தம் கொட்டியது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டவர்கள் அலறியடித்து ஓடினர். ஒருவழியாக ரோஷன் சிங் தப்பிச் சென்று சிறிது தூரத்தில் மயங்கி விழுந்தார். கத்திக்குத்தில் ஈடுபட்ட பாலசுரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் அடில், முகமது ஆகியோர் பைக்கில் தப்பி சென்றனர்.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரோஷன் சிங்கை மீட்டு சிகிச்சைக்காக காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவத்தை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். பதறவைக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மூலக்கதை