உங்கள் திருமணம் எப்போது? சிறுவனின் கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த சுவாரஸ்ய பதில்

  தினத்தந்தி
உங்கள் திருமணம் எப்போது? சிறுவனின் கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த சுவாரஸ்ய பதில்

அராரியா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பீகார் தேர்தலுக்காக மக்களவை எம்.பி.யான 55 வயதுடைய ராகுல் காந்தி, அராரியா நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் ஒருவனை அழைத்து பேசினார். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தெளிவாக இல்லை என்றபோதும், ராகுல் காந்தி சிறுவனின் கையை பிடித்து குலுக்கி விட்டு, சிறுவனுடன் உரையாடுகிறார். பின்னர் அன்போடு சிறுவனை தட்டிக்கொடுத்து விட்டு கூட்டத்தில் கலந்து விட்டார். இதன்பின்பு அந்த சிறுவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என கேட்டேன். அதற்கு அவர், என்னுடைய வேலை முடிந்ததும் திருமணம் செய்து கொள்வேன் என கூறினார் என்றான். இதனால், தேர்தல் வேலை முடிந்ததும், அடுத்த வேலை திருமணத்திற்கு தயாராவதுதான் என தெரிகிறது. ராகுல் காந்தியிடம் அடிக்கடி இதுபோன்று கேள்விகள் சமீப நாட்களாக கேட்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்காக பழைய டெல்லி பகுதியில் காந்திவாலா இனிப்பு கடையில், பாரம்பரிய இனிப்புகளை ராகுல் காந்தி வாங்கி கொண்டிருந்தபோது, அந்த கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின், அவரிடம் நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதனை பார்க்க நான் விரும்புகிறேன். அதற்கான இனிப்புகளையும் எங்கள் கடையிலேயே வாங்க வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என கூறினார்.

மூலக்கதை