கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட போராட்டம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

  தினத்தந்தி
கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட போராட்டம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம், பீகாரை தொடர்ந்து தமிழகம், கேரளா உள்பட 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழகத்தை போன்று கேரளாவிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இதுகுறித்து விவாதிக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக அனைத்துக் கட்சி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், விஸ்ணு நாத் (காங்கிரஸ்), சத்யன் மெக்கோரி (இந்திய கம்யூனிஸ்டு) குஞ்சாலி குட்டி (முஸ்லிம் லீக்), ஸ்டீபன் ஜார்ஜ் (கேரள காங்கிரஸ் எம்), பி.ஜே.ஜோசப் (கேரள காங்கிரஸ் ஜே) மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்த கூட்டத்தை பா.ஜனதா புறக்கணித்தது. அனைத்துக் கட்சி கூட்ட முடிவில், வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் திருத்தத்திற்கான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி சட்ட போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், 2002 தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்வது சாத்தியமற்றது என்றார்.

மூலக்கதை