பீகார் துணை முதல் மந்திரி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு

  தினத்தந்தி
பீகார் துணை முதல் மந்திரி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு

பாட்னா, பீகார் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. பீகார் துணை முதல் மந்திரியும் பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசராய் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.இந்த நிலையில், லக்கிசராய் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு காலை முதல் நேரில் சென்று விஜய் குமார் ஆய்வு செய்து வருகிறார். அப்போது, அவரது தொகுதிக்குள்பட்ட கோரியாரி கிராமத்துக்கு விஜய் குமார் சென்றபோது, அவரை ஊருக்குள் நுழைய விடாமல் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.மேலும், மாட்டுச் சாணம், கற்கள், காலணிகளை விஜய் குமார் சென்ற காரின் மீது வீசியதுடன், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.உடனடியாக காவல் கண்காணிப்பாளரை தொடர்புகொண்ட விஜய் குமார், அதிரடிப் படையினரை அனுப்புமாறும், தான் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய விஜய் குமார், “இவர்கள் அனைவரும் ஆர்ஜேடி குண்டர்கள். ஆட்சியில் இல்லாதபோதே இவர்களின் அட்டூழியங்களைப் பாருங்கள். என் வாக்குச்சாவடி முகவரை மிரட்டி, காலை 6.30 மணிக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். வாக்காளர்களை வெளியே வர விடுவதில்லை.” எனத் தெரிவித்தார்.

மூலக்கதை