ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் - விதர்பா ஆட்டம் டிரா

  தினத்தந்தி
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்  விதர்பா ஆட்டம் டிரா

கோவை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 113 ரன்களும், இந்திரஜித் 96 ரன்களும் அடித்தனர். விதர்பா தரப்பில் நாச்சிகேத் பூதே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அபாரா பேட்டிங்கை வெளிப்படுத்திய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 148.4 ஓவர்களில் 501 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் விதர்பா முதல் இன்னிங்சில் 210 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியில் யாஷ் ரத்தோட் 133 ரன்களும், துருவ் ஷோரே 82 ரன்களும், அமன் 80 ரன்களும், நாச்சிகேத் பூதே 51 ரன்களும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 210 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் அடித்திருந்தது. ஆதிஷ் 2 ரன்களுடனும், விமல் குமார் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி 204 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 89 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் சமனில் முடித்து கொள்ளப்பட்டது. பாபா இந்திரஜித் 77 ரன்களுடனும், சாய் கிஷோர் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மூலக்கதை