சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளிகளிடம் திருட்டு; 2 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை - 12 சவுக்கடி தண்டனை

சிங்கப்பூர், சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளிகளை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் இந்தியர்கள் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இந்தியாவை சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன்(வயது 23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன்(வயது 27) ஆகிய இருவரும், விடுமுறையை கழிப்பதற்காக கடந்த ஏப்ரல் 24-ந்தேதி சிங்கப்பூர் சென்றுள்ளனர். அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதிக்கு அவர்கள் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களிடம் வந்து, “பாலியல் தேவைகளுக்காக பெண்கள் வேண்டுமா?” என்று கேட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தபோது, 2 இளம்பெண்களின் தொலைபேசி எண்களை அந்த நபர் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையில் தங்களிடம் பணம் குறைவாக இருந்ததால், 2 பெண்களையும் அழைத்து அவர்களிடம் இருந்து பணத்தை திருட ஆரோக்கியசாமியும், ராஜேந்திரனும் திட்டமிட்டனர். இதன்படி முதலாவதாக ஒரு பெண்ணை போனில் அழைத்து, ஓட்டல் அறைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பின், அந்த பெண்ணை கடுமையாக தாக்கி, அவரது கை, கால்களை கட்டிப் போட்ட பின்னர், அந்த பெண்ணிடம் இருந்த பணம், நகைகள், வங்கி அட்டைகளை கொள்ளையடித்துவிட்டுச் சென்றனர். இதே போல், அன்றைய இரவே மற்றொரு பெண்ணையும் ஓட்டல் அறைக்கு வரவழைத்து அவரிடமும் பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பாலியல் தொழிலாளிகளை தாக்கி பணம் பறித்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதனிடையே, கோர்ட்டில் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இருவரும் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதில் ஆரோக்கியசாமி, “எனது தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு 3 சகோதரிகள் உள்ளனர். இருவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. எங்களிடம் பணம் இல்லை. அதனால் தான் திருட்டில் ஈடுபட்டோம்” என்று கூறினார். அதே போல் ராஜேந்திரன், “எனது மனைவியும், குழந்தையும் இந்தியாவில் தனியாக உள்ளனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்” என்று மன்றாடினார். இருப்பினும் அவர்களது கோரிக்கைகளை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. சிங்கப்பூரில் கொள்ளை சம்பவத்தின்போது காயம் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு 5 முதல் 20 வருடங்கள் வரை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இதன்படி ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனுக்கு தலா 5 ஆண்டுகள் சிறையும், 12 சவுக்கடிகளும் தண்டனையாக விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூலக்கதை
