ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி?

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி (64 வயது) தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுனர். இந்த நிலையில், முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே தகைச்சிக்கும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்ஜுமிக்கும் இடையிலான உள்கட்சி வாக்கெடுப்பில், சனே தகைச்சி வெற்றி பெற்றார். கட்சியின் 295 எம்.பி.க்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம், ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை சனே தகைச்சி பெற வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பிரதமராக பதவியேற்பவருக்கு நிறைய சிக்கல்களும் காத்திருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதது, நிதி ஊழல் மோசடிகளால் அதிருப்தியடைந்த வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது, அமெரிக்கா - ஜப்பான் நல்லுறவை மேம்படுத்துதல், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை உயர்த்துதல், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளுக்கான தீர்வு உள்ளிட்ட சிக்கல்கள் காத்திருக்கின்றன.
மூலக்கதை
