‘காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்’ - டிரம்ப் வலியுறுத்தல்

  தினத்தந்தி
‘காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்’  டிரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணயக் கைதிகள் அனைவரையும் மீட்டு, ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என நெதன்யாகு சூளுரைத்தார். இருப்பினும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்ப்பின் சமரச திட்டத்தை ஏற்க ஹமாஸ் இயக்கத்தினருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதை பரிசீலிப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அதிபர் டிரப்பின் போர் நிறுத்த முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் சூழலில், காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 53 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். இஸ்ரேல் உடனடியாக காசா மீதான குண்டுவீச்சு தாக்குலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் வெளியேற்ற முடியும். தற்போதைய சூழலில் பணயக் கைதிகளை வெளியேற்றுவது மிகவும் ஆபத்தானது. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது” என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை