யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இலங்கை, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படை வசமிருந்த 234 ஏக்கர் நிலத்தை வேளாண் பணிகளுக்காக அப்பகுதி விவசாயிகளுக்கு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை விடுவித்தார். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஒட்டகப்புலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 408 பயனாளிகளுக்கு அதிபர் விக்ரமசிங்க இலவச நிலப் பட்டாவை வழங்கினார்.

 

பொதுமக்களுக்கு 20 லட்சம் இலவச நிலப்பட்டா வழங்கும் நோக்கில்

செயல்படுத்தப்படும் தேசிய உருமயா திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதுகுறித்து இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வசமிருந்த 234 ஏக்கர் நிலத்தை 5 கிராம அலுவலர் பிரிவுகளில் வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுவித்தார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் 

 

தனித் தமிழீழ நாடு கோரிக்கையை முன்னிறுத்தி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இலங்கைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை