88% ஓட்டு வாங்கி புடின் சாதனை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
88% ஓட்டு வாங்கி புடின் சாதனை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை



மாஸ்கோ, “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். இது, கைக்கு எட்டும் துாரத்தில் தான் உள்ளது; ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை,” என, ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருமை

'நேட்டோ' எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில், ஐரோப்பிய நாடான உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டுடன் ரஷ்யா போரிட்டு வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 15ம் தேதி அங்கு நடந்தது. இதில், தற்போதைய அதிபரான விளாடிமிர் புடின், 71, போட்டியிட்டார்.

இவருடன், கம்யூனிஸ்ட் கட்சியின் நிகோலாய் கரிடோனோவ், தேசியவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோவ் ஆகியோர் போட்டியிட்டனர். மூன்று நாட்களாக நடந்த தேர்தலில், அந்நாட்டு மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

தேர்தலில் பதிவான ஓட்டுகள், கடந்த 15ம் தேதி நள்ளிரவு முதலே எண்ணப்பட்டன. இறுதி முடிவுகள் நேற்று காலை வெளியாகின; 88 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபராக ஐந்தாவது முறையாக புடின் தேர்வானார்.

இதன் வாயிலாக, ரஷ்ய வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில், நீண்ட காலம் பதவி வகிக்கும் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

உலக போர்

வெற்றிக்கு பின், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய விளாடிமிர் புடின் கூறியதாவது:

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும்,- ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும்.

ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை. மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை; கைக்கு எட்டும் தொலைவில் தான் உள்ளது.

அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது. நிலவரம் அப்படியிருக்க, அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

'ரஷ்யாவின் தேர்தல் சட்டவிரோதமானது; போலியானது' என அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விமர்சித்துள்ளன.

புடினை தோற்கடிக்கக்கூடிய ஒரே வேட்பாளராக கருதப்பட்ட ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி, கடந்த மாதம் ஆர்க்டிக் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். அவரின் மரணத்துக்கு புடின் தான் காரணம் என அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், நவல்னி மரணம் குறித்து முதன்முறையாக வாய் திறந்த புடின் கூறுகையில், ''நவல்னி சிறை மாற்றம் குறித்த பரிசீலனைக்கு நான் ஒப்புதல் அளித்தேன். அவரை விடுவிக்கவும் ஆதரவு தெரிவித்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். இது தான் வாழ்க்கை,'' என்றார்.



மாஸ்கோ, “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். இது, கைக்கு எட்டும் துாரத்தில் தான் உள்ளது; ஆனால், அத்தகைய சூழலை இங்கு

மூலக்கதை