கப்பலை கடத்த கொள்ளையர் முயற்சி; முறியடித்தது இந்திய கடற்படை

தினமலர்  தினமலர்
கப்பலை கடத்த கொள்ளையர் முயற்சி; முறியடித்தது இந்திய கடற்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்



புதுடில்லி : சோமாலிய கடற்பகுதியில், கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்திய கடற்படை வீரர்களின் தீவிர முயற்சியால், அவர்களின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர்.

சரக்கு கப்பல்



அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு கவலையளித்து வருகிறது.

கடந்த டிசம்பரில், அந்த வழியாக சென்ற மால்டா நாட்டு எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகளை விடுவித்துவிட்டு, அந்த கப்பலை கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சோமாலியா கடற்பகுதியில் வரும் கப்பல்களை, இந்த கப்பலை வைத்து மடக்கி கடத்தல், பணம் பறித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு நடத்தப்பட்ட கடத்தல் முயற்சி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் வாயிலாக தடுத்து நிறுத்தப்பட்டது. சோமாலியாவின் செங்கடல் பகுதியில் நேற்று சென்றிருந்த கொள்ளையர்களின் ரூயென் கப்பல், இந்திய கடற்படையின் போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம், வானில் பறந்த கடற்படை ஹெலிகாப்டர் வாயிலாக கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

எச்சரிக்கை



அப்போது, சரக்கு கப்பலின் மேல்தளத்தில் இருந்த கொள்ளையர்களில் ஒருவன், இந்திய கடற்படை ஹெலிகாப்டரை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டான்.

இருப்பினும், அசராத நம் கடற்படை வீரர்கள், சரக்கு கப்பலில் மாலுமிகள், பயணியர் இருந்தால் வெளியே அனுப்பி வைக்கும்படி எச்சரித்தனர்.

அதேசமயம் கடற்கொள்ளையர்களை சரணடையும்படி அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலிலேயே முடங்கினர்.

இது குறித்து கடற்படை அதிகாரிகள் கூறுகையில், 'சோமாலிய கடற்பகுதி வழியாக செல்லும் கப்பல்களை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் முழு அர்ப்பணிப்புடன் உறுதியுடன் கடற்படை செயல்பட்டு வருகிறது' என தெரிவித்தனர்.

கடற்படையினரின் முயற்சியால், நேற்று முன்தினம் நம் அண்டை நாடான வங்கதேச சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்டு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில் லைபீரியா நாட்டு கப்பல்களும், ஜனவரியில் பாகிஸ்தான் கப்பலும், கடந்த மாதம் ஈரானிய கப்பலும், கடற்கொள்ளையர்களிடம் இருந்து நம் கடற்படையினரால் மீட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

புதுடில்லி : சோமாலிய கடற்பகுதியில், கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்திய கடற்படை வீரர்களின் தீவிர முயற்சியால், அவர்களின் கடத்தல் முயற்சி

மூலக்கதை