இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

நிலவின் மேற்பரப்பில் முதன்முதலில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்கிய தருணம் இது.

 

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்திருக்கும் இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அதன் ஒடிசியஸ் ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது.

 

விண்கலம் தற்காலிகமாகச் செயலிழந்ததைக் கண்டுபிடிக்கச் சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதையடுத்து, அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

 

கடந்த வாரம் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஒடிசியஸ் விண்கலம் ஏவப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஒடிசியஸ் லேண்டர் மூலம் ஆறு அறிவியல் கருவிகளை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவின் தென் துருவப் பகுதியில் அமெரிக்காவும் தடம் பதித்துள்ளது.

 

அமெரிக்க விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் இந்த வெற்றி குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இதற்குக் காரணம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விண்கலம் நிலவில் கால் பதித்திருக்கிறது.

 

கடைசியாக, நாசா 1972-ல் தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்கியிருந்தது.

 

தரையிறங்கும் பணி தொடங்குவதற்கு முன்பே, அந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டாளர்கள் மிக மோசமான தொழில்நுட்பச் சிக்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது. விண்கலத்தில் உயரத்தையும் வேகத்தையும் கணக்கிடும் லேசர்கள் திடீரெனச் செயல்படாமல் போனது. எனினும் சாவிடமிருந்து வாங்கிய சில லேசர்கள் அந்த விண்கலத்தில் இருந்ததால், பொறியாளர்கள் அவற்றைக் கணினியில் இணைத்துச் செயல்பட வைத்தனர்.

 

ஒடிஸியஸ் விண்கலம் இந்திய நேரப்படி பிப்ரவரி 22-ம் தேதி மாலை 6.23 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. முதலில் நிலவில் தரையிறங்கிய தானியங்கிகளிடமிருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை. பின், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த ரோபோக்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

 

இந்தத் தொழில்நுட்பச் சிக்கல், தரையிறக்கம் தொடர்பாகச் சில கவலைகளை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு சில மணி நேரத்திற்குள் அது சரி செய்யப்பட்டு, நிலவிலிருந்து படங்கள் உள்ளிட்ட தரவுகளை அவை அனுப்பியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

 

ரோபோ தரையிறங்கிய இடம், மலாபெர்ட் எனப்படும் சுமார் 5 கிலோமீட்டர் உயரமுள்ள மலை போன்ற பகுதிக்கு அடுத்ததாக உள்ள ஒரு பள்ளம் நிறைந்த நிலப்பரப்பாகும். இந்தப் பகுதியில் உறைந்த நிலையில் நீர் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

இதுதொடர்பாகப் பேசிய நாசாவின் கிரக அறிவியல் இயக்குநர் லோரி கிளேஸ், “நாம் அந்தப் பனியைப் பருகக்கூடிய குடிநீராக மாற்றலாம் என்றும் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, அவற்றை எரிபொருளாகவும், விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ள லோரி கிளேஸ் இது உண்மையில் மனித ஆய்வுக்கு உதவும்,”என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை