'எல்லைகளில் வேலி அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் முழுமை அடையும்'

  தினமலர்
எல்லைகளில் வேலி அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் முழுமை அடையும்

ஹசாரிபாக்: “நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலிகள் அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமை அடையும்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டதன் 59ம் ஆண்டு விழா, ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லை பாதுகாப்புப் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின், வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

நம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது.

பாகிஸ்தான் எல்லையாக இருந்தாலும், வங்கதேச எல்லையாக இருந்தாலும், அங்கே எதிரியின் நகர்வு இருந்தால், அங்கு பாதுகாப்பு பணியில் நம் எல்லை பாதுகாப்பு படை எப்போதும் முதன்மையாக இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல், இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - வங்கதேசம் எல்லைகளில், 560 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைத்து இடைவெளிகள் அடைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள இந்த இரு எல்லைகளில் உள்ள அனைத்து இடைவெளிகளும் முறையே அடைக்கப்பட்டு, 60 கி.மீ., துாரத்தில் மட்டுமே பணிகள் தொடர்கின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த இரு எல்லைகளும் முழுமையாக அடைக்கப்படும்.

பிரதமர் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது. ஜி - 20 மாநாடு, சந்திரயான் - -3 போன்ற வெற்றிகளின் பின்னால் எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளது.

இந்த வெற்றி பயணத்தின் இன்றியமையாத துாண்கள் நீங்கள். ஒரு நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் அந்த நாட்டுக்கு வளர்ச்சியும் செழிப்பும் இருக்காது.

இதற்கான உங்களின் தியாகம் அளப்பரியது. எல்லைகளில் போடப்பட்டுள்ள வேலி மட்டும் நாட்டை பாதுகாக்காது. உங்களின் துணிச்சல் தான் அதை செயல்படுத்துகிறது. நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னால் உங்களின் தியாகம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஹசாரிபாக்: “நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலிகள் அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமை அடையும்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை