காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட முடியாது!

  தினமலர்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட முடியாது!

புதுடில்லி :'காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நதி நீர் ஒழுங்குகாற்று கமிட்டி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

புதுடில்லியில் கடந்த, 18-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு வினாடிக்கு, 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் விபரம்:

கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. இருப்பினும் தமிழகத்தின் வேளாண் தேவைகளுக்காக நீர் திறந்துவிட்டுள்ளோம்.

இந்நிலையில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு வினாடிக்கு, 5,000 கன அடி நீரை திறக்கும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அணைகளில் நீர் இல்லாததால் எங்களால் திறக்க முடியாது. தற்போது இருக்கும் நீரை கொண்டு கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய இயலாது. தமிழகத்துக்கு நீர் திறப்பது சாத்தியம் இல்லை. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, ஜி.உமாபதி ஆகியோர் வாதிட்டதாவது:

தமிழகத்துக்கு, 7,200 கன அடி தண்ணீர் தேவை என, காவிரி மேலாண்மை ஆணையம் முதலில் முடிவு செய்தது. ஆனால் இறுதி உத்தரவில் வினாடிக்கு, 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. கர்நாடகாவில் மழை பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொள்கிறோம். அதற்காக இருக்கும் நீரைக்கூட தர மறுத்தால் எப்படி?

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிட்டதாவது:

தமிழகத்துக்கு, 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதே கர்நாடகாவின் நலனுக்கு எதிரானது. மாநிலத்தில், குறிப்பாக பெங்களூரு போன்ற நகர் பகுதியில் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்துக்கோ வேளாண் பாசனத்துக்கு தான் நீர் தேவைப்படுகிறது. கடந்த, 15 நாட்களில் கர்நாடகாவின் நிலை மோசமடைந்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தமிழகத்துக்கு, 3,000 கன அடிக்கு அதிகமாக தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்து இருக்க கூடாது.

தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், கர்நாடக அணைகளில், 53.42 சதவீதம் நீர் தட்டுப்பாடு உள்ளது. எனவே, தமிழகத்துக்கு 2,500 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று கமிட்டி பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க முடியாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறது. காவிரியில் இருந்து வினாடிக்கு, 5,000 கன அடி தண்ணீரை திறக்கும்படி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று கமிட்டி பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும்.

அதேவேளையில் காவிரியில் இருந்து, 24,000 கன அடி நீரை திறக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'காவிரி விவகாரத்தில், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது' என்று நேற்று, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்க செயலர் விமல்நாதன்:

இந்த ஆண்டு, இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி பாதித்துள்ளது. எனவே, கர்நாடகா அரசு தண்ணீர் தராததால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடர வேண்டும்.மேலும், காவிரி சமவெளி மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.----------தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பாண்டியன்:

ஜூலை முதல் வாரத்திலேயே ஆணையத்தின் அவசர கூட்டத்தை கூட்டி, தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால், குறுவை கருகி இருக்காது. சம்பா சாகுபடியையும் மேற்கொண்டிருக்க முடியும்.தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. தமிழக அரசு, இனியாவது உரிய முறையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு, விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை உருவாக்கி உள்ளது.----தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் நடராஜன்:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது. 5,000 கன அடி தண்ணீர் குறுவை பயிருக்கு போதுமானதாக இருக்காது. சம்பா சாகுபடியை செய்ய முடியாத சூழல் ஏற்படும். இருப்பினும், பாற்றாக்குறை காலங்களில், இரண்டு மாநிலங்களும் எப்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறையின் படி, இம்மாத தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும்.--

தீர்ப்பு குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வாயிலாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதன் வாயிலாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பு என்ன என்பதை கர்நாடகாவிற்கு, உச்ச நீதிமன்றம் உணர்த்தியுள்ளது. பற்றாக்குறை காலத்திலும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவாதத்தை, உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. கடந்த ஜூலை முதல் வாரத்தில், சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு துவங்கி இருந்தால், குறுவை பயிர்கள் கருகி இருக்காது; சம்பா சாகுபடியை துவங்கி இருக்கலாம். காலம் கடந்து, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வழக்கு தொடர்ந்ததால், காலதாமதம் ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுடில்லி :'காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நதி நீர் ஒழுங்குகாற்று கமிட்டி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் நேற்று

மூலக்கதை