‛பிரதர்' ஆக மாறிய ஜெயம் ரவி

தினமலர்  தினமலர்
‛பிரதர் ஆக மாறிய ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவியின் 30வது படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்திற்கு 'பிரதர்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, விடிவி.கணேஷ், சீதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அக்கா, தம்பி கதை களத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

'பிரதர்' குறித்து பேசிய இயக்குநர் எம்.ராஜேஷ், "ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் 'ஜெயம்', 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்' மற்றும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் 'பிரதர்' இணையும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்," என்றார்.

மூலக்கதை