ஆசிய கோப்பை: இந்திய அணி 19ம் தேதி அறிவிப்பு

  தினத்தந்தி
ஆசிய கோப்பை: இந்திய அணி 19ம் தேதி அறிவிப்பு

மும்பை, 8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர் , தேர்வுக்குழு தலைவர் அகர்கர் தலைமையில் 19ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது . தொடர்ந்து ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது . இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை