முதலில் ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியிடம்.. ரவி சாஸ்திரி புகழாரம்

  தினத்தந்தி
முதலில் ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியிடம்.. ரவி சாஸ்திரி புகழாரம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். குறிப்பாக தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்பட்ட விராட் கோலி தற்போது சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். இந்நிலையில் தோனிக்கு பின் இந்திய அணியை தலைமை தாங்க விராட் கோலி சரியானவர் என்பதை தாம் கண்டறிந்ததாக முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். தம்முடைய உணர்வுகளை நிஜமாக்கிய விராட் கோலி உலக கிரிக்கெட்டை பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ஆதிக்கம் செய்ததாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தான் அடையாளம் கண்ட வீரர். அவர் இந்திய அணியை தலைமைத் தாங்க வேண்டுமென நான் விரும்பினேன். தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை நிறைவு செய்ததும் நான் பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் விராட் கோலி அற்புதமான வேலையை செய்தார். முதலில் ஒரு பேட்ஸ்மேனாக அவரிடம் எதிரணிகள் மீது ஆதிக்கம் செலுத்தி விளையாடும் திறன் இருந்தது. கடினமாக விளையாடிய அவர் வெற்றிகளைப் பெற்று ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினார். விராட் கோலி தனது உச்சத்தில் இருந்தபோது நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று சொல்வேன். ஏனெனில் அந்த 5 வருடங்கள் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியாக ஜொலித்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அவர் விளையாடிய சில இன்னிங்ஸ்கள் நம்ப முடியாததாக இருந்தது” என்று கூறினார்.

மூலக்கதை