வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பாகிஸ்தான்.. விளாசிய முன்னாள் வீரர்

லாகூர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2 மற்றும் 3-வது போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்று அசத்தியது. 1991-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வெல்வது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 295 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்ததுடன், தொடரையும் பறிகொடுத்தது. எனவே அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளரான மைக் ஹெசனை அந்நாட்டின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் சரமாரியாக விளாசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “மைக் ஹெசன் ஒரு நல்ல டி20 பயிற்சியாளர். ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு அவரிடம் என்ன குணங்கள் உள்ளன என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில், நீங்கள் தரமான வீரர்களுடன் விளையாடவில்லை என்றால், இதுதான் நடக்கும். முழுமையான ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்காவிட்டால், உங்களால் 50 ஓவர்கள் விளையாட முடியாது. அணியின் சொதப்பலுக்கு மோசமான கொள்கையே தவிர, வீரர்களின் தவறு காரணமல்ல. வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்களில் பாகிஸ்தான் வீரர்களின் பலவீனம் எப்போதும் வெளிப்படுகிறது. ஆனால் அவற்றை சரி செய்ய முயற்சிக்கவில்லை. நல்லவேளையாக எதிரணியில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்று தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததற்கு நன்றி. ஒரு காலத்தில் எங்களிடம் அதிரடியான திறமை இருந்தது. அதனை வைத்து நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நாங்கள் ஒருபோதும் ஒரு தனிநபரை சார்ந்திருக்கவில்லை. எல்லோரும் வெற்றிகளில் பங்காற்றுவார்கள். யாரும் தப்பிக்கும் வழிகளைத் தேடுவதில்லை. ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டது, கடந்த 10-15 ஆண்டுகளில், வீரர்கள் தங்களுக்காக விளையாடத் தொடங்கியுள்ளனர். எல்லோரும் தங்கள் சராசரிக்காக விளையாடுகிறார்கள். உங்கள் நாட்டிற்காக போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்துடன் நீங்கள் விளையாட வேண்டும். நாம் நோக்கத்தையும், மனநிலையையும் மாற்றி, வெற்றிக்கான சூழலை உருவாக்க வேண்டும். நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப நீங்கள் விளையாட வேண்டும்” என்று கூறினார்.
மூலக்கதை
