ஆஸி.க்கு எதிரான 2-வது டி20: தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டருக்கு தண்டனை.. காரணம் என்ன..?

  தினத்தந்தி
ஆஸி.க்கு எதிரான 2வது டி20: தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டருக்கு தண்டனை.. காரணம் என்ன..?

டார்வின், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் நிறைவடைந்தவுடன் ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பம் ஆகிறது. முன்னதாக இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி டார்வினில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 125 ரன்கள் அடித்து அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 165 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பென் துவார்ஷுயுசின் விக்கெட்டை தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் கார்பின் போஷ் கைப்பற்றினார். விக்கெட் கைப்பற்றியதும் அதனை கொண்டாடும் விதமாக கார்பின் போஷ், துவார்ஷுயுசுக்கு நேராக பெவிலியன் நோக்கி சைகை செய்தார். இது ஐ.சி.சி.விதிமுறை 2.5-ஐ மீறிய குற்றமாகும். இதனால் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கி ஐ.சி.சி. தண்டனை விதித்துள்ளது.

மூலக்கதை