ஐ.பி.எல்.2026: அவர்தான் அதிக தொகைக்கு ஏலம் போவார்.. இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடர் முடிவடைந்த சில வாரங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்துவிட்டன. ஒவ்வொரு அணியின் நிர்வாகங்களும் தங்களது அணியை தற்போதே வலுப்படுத்த ஆரம்பித்துவிட்டன. வீரர்களை டிரேடிங் முறையில் மாற்றிக்கொள்ளவும் பேச்சுகள் நடப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் அடுத்த சீசன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் அடுத்த சீசனுக்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள், கடந்த ஏலத்தில் பங்கேற்க முடியாத வீரர்கள், அறிமுக வீரர்கள் என பல தரப்பட்ட வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்வார்கள். இதில் தங்களுக்கு தேவையான வீரர்களை அணிகள் ஏலத்தில் வாங்கிக்கொள்ளும். இந்நிலையில் ஐ.பி.எல்.2026 மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய வாய்ப்புள்ள வீரர் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “கேமரூன் கிரீன், (ஆஸ்திரேலியா) ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த வீரராக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு அவரது பேட்டிங் பார்ம் நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. அவர் இன்னும் பந்து வீசத் தயாராக இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் பந்து வீசத் தொடங்குவார். தற்போது அவர் பந்து வீசாததால் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்கிறார்” என்று கூறினார்.
மூலக்கதை
