ஐ.பி.எல்.: விதிமுறையை மீறி பிரெவிசை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே..? அஸ்வின் அதிர்ச்சி தகவல்

  தினத்தந்தி
ஐ.பி.எல்.: விதிமுறையை மீறி பிரெவிசை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே..? அஸ்வின் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சீசனுக்கான சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் விலகியதால், அவருக்கு பதிலாக மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி இளம் பேட்ஸ்மேன் ‘பேபி ஏபிடி’ என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்பட்டார். குர்ஜப்னீத் சிங்கின் ஏலத் தொகையான ரூ.2.2 கோடிக்கு பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை யாரும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கிடைத்த இந்த வாய்ப்பில் பிரெவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 ஆட்டங்களில் ஆடி 2 அரைசதம், 17 சிக்சர் உள்பட 225 ரன்கள் விளாசி கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக அடுத்த சீசனில் அவரை சென்னை அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரெவிசை சிஎஸ்கே அணி கூடுதல் தொகைக்கு வாங்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அஸ்வின் பேசியது பின்வருமாறு:- “டிவால்ட் பிரெவிஸ் குறித்து நான் ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிரெவிஸ் கடந்த சீசனின் இரண்டாம் பாதியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதற்கு முன்னதாக சில அணிகள் அவரை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவரது அடிப்படை விலைக்கு (ரூ.75 லட்சம்) மேல் கூடுதலாக பணம் கொடுக்க அந்த அணிகள் தயாராக இல்லாததால் அவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தன. பொதுவாக ஒரு மாற்று வீரரை அணியில் அவரது அடிப்படை விலையில் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் சில நேரம் என்ன நடக்கிறது என்றால், சிலர் தங்களுக்கு கூடுதல் தொகை கொடுத்தால்தான் விளையாட வருவோம் என்று தெரிவிப்பார்கள். ஏனெனில் அடுத்த ஆண்டு அதிக தொகைக்கு விலைபோக வாய்ப்புள்ளது என்று அவர்களுக்கு தெரியும். இதுதான் பிரேவிசின் நிலைப்பாடாகவும் இருந்தது. அவர் கேட்ட தொகையை கொடுக்க சென்னை அணி தயாராக இருந்ததால், அணியுடன் இணைந்தார். அவரது வருகையால் பேட்டிங் வரிசையும் வலுவடைந்தது. இப்போது சென்னை அணியின் கையில் கிரீடம் போன்ற ஒரு வீரர் கிடைத்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் மினி ஏலத்தில் சென்னை அணி கையில் ரூ.30 கோடியுடன் நுழைவார்கள். சிஎஸ்கேவின் அடுத்த சீசன் சிறப்பாகவும் சரியானதாகவும் தெரிகிறது” என்று கூறினார். ஐ.பி.எல். விதிப்படி காயமடைந்த வீரரின் ஏலத் தொகைக்கு மேல் மாற்று வீரருக்கு கொடுக்கக்கூடாது. ஒரு வேளை பிரெவிஸ் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆகியிருந்தால், அது சென்னை அணிக்கு சிக்கலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை