டி20 உலகக் கோப்பை: ‘பவர்-பிளே’யில் பந்து வீச ஆர்வம் - மேக்ஸ்வெல் பேட்டி

கெய்ன்ஸ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சுழற்பந்துவீசும் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். டி20 போட்டிகளில் முழுமையாக கவனம் செலுத்தும் அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றுள்ளார். இதில் அவர் முதல் இரு ஆட்டங்களில், பீல்டிங் கட்டுப்பாடு உள்ள பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) பந்து வீசி இரு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த நிலையில் அவர் தொடர்ந்து ‘பவர்-பிளே’யில் பந்து வீச விரும்புவதாக கூறியுள்ளார். நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியையொட்டி கெய்ன்ஸ் நகரில் நேற்று நிருபர்களை சந்தித்த மேக்ஸ்வெல் கூறுகையில், ‘2026-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி (பிப்ரவரி- மார்ச்) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்திய துணை கண்டத்தில் விளையாடும் போது சுழற்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் முன்கூட்டியே பந்து வீச வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். குறிப்பாக இங்குள்ள வறண்ட ஆடுகளங்களில், புதிய பந்தில் நூல் புதிதாக இருக்கும் போது பந்தை நன்றாக பிடித்து வீசுவதற்கு நல்ல பிடிமானம் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். விக்கெட்டுகள் வீழ்த்துவது என்றால் எனக்கு கொள்ளை பிரியம். எனது பந்து வீச்சில் எப்போது விக்கெட் எடுத்தாலும் மிகவும் ஆச்சரியமடைவேன். பவர்-பிளேயில் எனக்குரிய வேலை இருந்தால் செய்வேன். அதில் என்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன். இதே போல் பேட்டிங்கில் அணிக்கு நான் எந்த வரிசையில் ஆடினால் சரியாக இருக்கும் என விரும்புகிறார்களோ? அந்த வரிசையில் ஆடுகிறேன். அதனால் எனது பேட்டிங் வரிசை அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தொடக்க ஆட்டக்காராக களம் கண்டேன். தற்போதைய தென் ஆப்பிரிக்க தொடரில் பின்வரிசையில் ஆடுகிறேன். இப்போதைக்கு அணியில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க உதவுகிறேன்’. இவ்வாறு அவர் கூறினார். 36 வயதான மேக்ஸ்வெல் இதுவரை 123 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 5 சதம் உள்பட 2,771 ரன்களும், 49 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
மூலக்கதை
