ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்

துபாய், ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார். இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, எல்லையில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது, நாம் எப்படி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியும்?. இது மிகவும் சாதாரண விஷயம். ஒரு கிரிக்கெட் போட்டியைத் தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது. நமது ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது, அதனுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை. எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கு இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது. இந்தப் பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கிரிக்கெட் என்பது மிகவும் சிறிய விஷயம். தேசமே எப்போதும் முதன்மையானது. ரத்தமும் நீரும் ஒன்றாக ஓடமுடியாது என்பது நமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலக்கதை
