துலீப் கோப்பை கிரிக்கெட்: ஆகாஷ் தீப் விலகல்

மும்பை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன. அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகளும், இரண்டாவது பிளே ஆப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளன இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டன. இதில் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷானும், அணியின் துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரியான் பராக் மற்றும் ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில் துலீப் கோப்பை தொடருக்கு முன்னதாக கிழக்கு மண்டல அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் இடம்பிடித்திருந்த ஆகாஷ் தீப் துலீப் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் சில அசவுகரியங்களை உணர்ந்ததாகவும், இதன் காரணமாக அவர் துலீப் கோப்பை தொடரில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆகாஷ் தீப் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஆகாஷ் தீப் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக அசாம் வேகப்பந்து வீச்சாளர் முக்தார் உசேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முக்தார் இதுவரை 40 முதல்தர போட்டிகளில் விளையாடி 132 விக்கெட்டுகளையும், 580 ரன்களையும் எடுத்துள்ளார். கிழக்கு மண்டல அணி: இஷான் கிஷன் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டேனிஷ் தாஸ், ஸ்ரீதாம் பால், சரண்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உத்கர்ஷ் சிங், மனிஷி, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், முக்தார் உசேன், முகமது ஷமி கூடுதல் வீரர்கள்: முக்தர் ஹுசைன், ஆஷிர்வாத் ஸ்வைன், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வஸ்திக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்.
மூலக்கதை
